குரங்கிலிருந்து மனிதன்

வெளியே விளையாட்டு திடலுக்கு வருவதற்குள் பத்து மணி ஆகிவிட்டது ஜானுக்கு. திடலுக்கு வந்து தலை நிமிர்ந்து வானத்தை வேடிக்கைப் பார்த்து தான் மணி பத்து என குத்துமதிப்பாய் ஜான் அறிந்துக்கொண்டான். கிளாஸ் roof மூலம் சூரியனின் முழு தீவிரமும் அத்திடலில் லாத்திக்கொண்டிருந்தவர்களை சுட்டெரித்தது.

அக்காலையின் டெஸ்டுகள் முடிக்க இவ்வளவு நேரமெடுக்குமென ஜான் நினைக்கவில்லை. தன் வாழ்னாளின் இத்தனை மணி நேரத்தை பரிட்சை எழுதியே கழிக்கும் சோகத்தை புறந்தள்ளிவிட்டு தன் நண்பனைத் தேடினான். சுற்று முற்றும் பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. கண்ணை மேலே நிமிர்த்தியபோது மூன்றாம் தளத்தில் ஓர் உருவம் படுத்திருந்தது தெரிய ஜான் நடையைக் கட்டினான். ஆம், அங்கு டீரோ தான் படுத்திருந்தான் கையைக் காலை விரித்து கண்கள் மூடி.

“இந்த வெயில்ல எப்படி மேல் மாடில படுக்க முடியுதுடா பூச்சி?”

டீரோ கண்களைத் திறக்காது தலையை மட்டும் ஜான் பக்கம் சாய்த்தான், “அசதில எதுவுமே தெரியாது மச்சி.”

“எனக்கு நிறைய டெஸ்ட் இருந்துச்சு. நான் லேட்டா வந்தேன். நீ அப்போவே வந்துட்டு ஓவர் சீன் போடுற?”

“இன்னைக்கு ஓட வச்சுட்டானுங்க டா. ஒரு ஆளு எத்தனை தடவை தான் அதே டிராக் ல சுத்தி சுத்தி வர்ரது? வெளி இடமா இருந்தா தெரியாது, ஓடி இருப்பேன். நூறு மீட்டர் டிராக்ல நூறு தடவ சுத்த சொன்னா?”

“ம்ம்ம்… உன்ன வெளிய விட்டா நீ ஆப்பிரிக்காவுக்கே ஓடிருவன்னு தான் கூண்டுக்குள்ள சுத்த விட்டுருக்கானுங்க பூச்சி,”

“ஆமாம் ஓடி இருப்பேன். அதுவும் இந்த டெஸ்ட் ல ஒரு ரவுண்ட் ஓடுனா ஒரு ஸ்பூன் சாப்பாடு தர்ரானுங்க. அத சாப்புடாம ரெண்டு ரவுண்டு ஓடுனா 4 ஸ்பூன் சாப்பாடு வைக்கிறானுங்க.”

“எவன் டெஸ்ட் conduct பண்ணான்? ரமேஷ் தான?”

“அந்த தாயோளி தான். மூனு ரவுண்ட் முழுசா ஓடிட்டு சாப்பாடு இடத்துக்கு வந்தா அத விட ஜாஸ்தியா தருவானுங்க நு நினைச்சேன். அதே அளவு தந்தான். வயித்த ஏமாத்தலாமா?”

“ஏமாத்த கூடாது தான். ஆனா நமக்கு என்ன வழி இருக்கு. ஓட வேண்டியது தான்.”

“இங்க கொஞ்சம் அமைதியா இருக்கும்னு வந்துட்டேன் மாடிக்கு.”

“இரு எவனாவது முந்தானாள் சாப்பாட பதுக்கி வச்சிருக்கானா நு பார்த்து கொஞ்சம் எடுத்துட்டு வர்ரேன்.”

“தாங்க்ஸ் மச்சி.” டீரோ தன் தலையை மீண்டும் முன்னுக்கு சாய்த்தான்.

ஜான் மூன்றாம் தளத்திலிருந்து இறங்கி அங்கு சூழ்ந்திருந்த மற்றவர்களிடம் பேசி, இல்லை கெஞ்சி, எதையாவது தன் நண்பனுக்கு கொடுக்க தேடினான். அப்போது அங்கு திடீர் அரவம் எழ ஒரே காச்சு மூச்சு என இருந்தது. அவ்விடத்துக்கு சென்ற ஜான் அங்கு நடப்பதைக் கண்டு திகைத்தான்.

லெனின் தலையில் புதிதாய் ஒரு சட்டி கவுத்தி இருக்க அதை எடுக்க முற்பட்ட லெனின் அங்கும் இங்கும் குதித்துக்கொண்டிருந்தான்.  சட்டி அவன் தலையோடு ஒட்டிக்கொள்ள லெனின் எரிச்சலிலும் கோபத்திலும் பதற்றத்திலும் அதைப் பிடித்து இழுத்தான். ஆஆஆ என கத்தினான். தன் முகத்தைக் கீறினான். இச்சங்கடமான சம்பவத்தை மற்றவர்களும் ஜான் போல் எதுவும் புரியாது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டம் கடல் போல் பிரிய அங்கு டான் வந்தார். யாரோ டானுக்கு செய்தி சொல்லிருக்க வேண்டும் அதுவும் டானே நேரில் வருகிறார் என்றால் லெனின் விஷயம் பெரிய விஷயமாக இருக்க வேண்டும்.

டான் முன்னுக்கு வர அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர் ஜானும் உட்பட.

“டேய் அவன் கைய கால புடிச்சு தூக்கிட்டு வாங்க,” என டான் கட்டளையிட லெனினை டானின் ஆட்கள் தூக்கிக் கொண்டு டானின் செல்லுக்கு மறைந்தனர்.

எங்கு ஜானுக்கு தைரியம் வந்ததென தெரியவில்லை ஆனால் மற்றவர்கள் அக்காட்சியை காண இவன் மட்டும் டானையும் அவன் ஆட்களையும் பிந்தொடர்ந்தான். டான் செல் உள்ளே லெனின் கொண்டு செல்லப்பட ஜான் வாசலில் நிறுத்தப்பட்டான்.

“இங்கைலாம் வரப்படாது,” ஆட்கள் இவனைத் தடுத்தனர். புதிதாய் தோன்றிய curiousity பேய் போல் பிடித்துக்கொள்ள அங்கு வெயிலில் காயும் நண்பண் எப்படியாவது தன் வயிற்றை நிரப்பிக்கொள்வான் என நினைத்த ஜான் வாசலிலேயே நின்றான்.

கண்ணாடி roof வழியே நட்சத்திரங்கள் இவனைக் கண்டு சிரித்தன. தூக்கம் சொக்க அங்கு வாசலிலேயே ஓரமாய் படுத்துவிட்டான் ஜான். யாரோ இவன் தோளைத் தட்ட விழித்துக்கொண்டான் ஜான்.

“காலைலேர்ந்து வாசலிலேயே நிக்குற நு டான் கிட்ட சொன்னேன். உள்ள கூப்பிடுறாரு.”

அவனுடைய செல் போல் தான் இருந்தது டானின் செல்லும். அதே அளவு, அதே சிமண்ட் தரை, கரை படிந்த சுவர். ஆனால் அக்குறுகிய இடத்திலும் டானை தவிர்த்து மற்ற இருவர் நின்றனர். லெனினைக் காணவில்லை. தன்னை மறந்து தூங்கியபோது லெனினை வேறு செல்லுக்கு மாற்றிவிட்டார்கள் போலும்.

டான் இவனைப் பார்த்தார்.

“லெனின்..எங்க?”

“பக்கத்து செல்லுல இருக்கான். அவன பத்தி கேட்க தான் வாசல்ல காய்ஞ்சு கிடந்தியா?” டான் சிரித்தார்.

“ஆமாம்..” இப்போது டானின் சிரிப்பு இன்னும் சத்தமாய் கேட்டது.

“அவன் தலைல மாட்டுன சட்டிய எடுத்தாச்சா?”

“அது பேரு ஹெல்மட். அதுலாம் எடுக்க முடியாது தம்பி.”

“ஏன்?”

“screw பண்ணிருக்கானுங்க. screwdriver உன் கிட்ட இருக்கா? அப்புறம்?”

“நம்ம எல்லாருக்கும் ஹெல்மட் மாட்டுவாங்களா?”

“நீ புத்திசாலி தான். இந்த கேள்விக்காக ஒரு நாள் முழுக்க காத்துக்கிடக்கலாம். இந்த ஹெல்மட் லாம் எங்க தாத்தா சொன்னது. நானும் இதை நம்பல ஆனா லெனின பார்த்ததும் அந்த காலத்து ஆளுங்க சொன்னது உண்மை நு தெரிஞ்சது. அவனுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?”

ignorance is bliss என மனதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது ஜானுக்கு ஆயினும் ஜான் அவ்விடத்தை விட்டு நகரவில்லை.

“அவன் மண்ட ஓட, அதான் மசுருக்கு கீழ தடமா ஒன்னு இருக்குமே, தட்டுனா டக்கு டக்குன்னு சவுண்ட் வருமே அத எடுத்துட்டானுங்க. உள்ள மூளைல ஆராய்ச்சி பண்ண எடுத்திருக்கானுங்க. மூளைக்கு எதுவும் ஆக கூடாதுன்னு ஹெல்மட் மாட்டி விட்டுருக்காங்க. எங்க முப்பாட்டன் காலத்துல இது நிறைய நடந்துச்சாம். அப்புறம் சில மனுஷங்க உரிமை போராட்டம், அறம் போராட்டம் நடத்தி இதுக்கு ஒரு முடிவு கட்டுனாங்களாம். அதுலேர்ந்து இந்த ஹெல்மட் ஐ யாரும் பார்க்கல, இன்னைக்கு வரை.” டான் பேசிவிட்டு ஜானின் முகத்தைக் கவனித்தார்.

“ஆனா லெனினுக்கு போட்டுருக்காங்க?”

“அதான் தெரியல. யாருக்கும் தெரியாம நடக்குதுன்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் பண்ண மாட்டாங்க ஆனா நம்ம ஆளுங்க ஒன்னு ரெண்டு பேருக்கு இது கண்டிப்பா நடக்கும். இப்ப தான் ஆரம்பிச்சிருக்கானுங்க. மத்தவனுங்க கிட்ட போய் சொல்லிட்டு திரியாதே என்னா?” டான் பேச்சை முடித்தார்.

எப்படி மீண்டும் தன் செல்லுக்கு வந்தான் என ஜான் அறியவில்லை. அவனின் கால்கள் ஷாக் இல் உறைந்த மனதை எப்படியோ பத்திரமாய் செல்லுக்கு கொண்டு வந்து சேர்த்தன. இரவு முழுக்க லெனின் ஹெல்மெட் உம் அதன் கீழ் தெரியும் மூளையுமே கண் முன் தோன்றியது. லெனின் கத்துவது கேட்டது. அவன் தன்னைக் கீறுவது போல் ஜானுக்கு தோன்றியது. அசதியில் அவன் உடல் தூங்க அவன் மனம் விழித்திருந்தது.

அடுத்த நாள் டெஸ்ட் முடித்துவிட்டு விளையாட்டு இடத்துக்கு வந்தபோது அங்கு டீரோ அமர்ந்து கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“இந்தா மச்சி உனக்கு தான் வச்சிருக்கேன்.”

“நேத்து சோர்ந்து போய் கிடந்த. இன்னைக்கு கடல உறிச்சிட்டு இருக்க? டெஸ்ட் மாத்திட்டானுங்களா?”

“இல்ல மச்சி. இன்னைக்கும் அதே ரமேஷ் பய தான். அதே ரன்னிங் டெஸ்ட் தான். ஆனா நம்ம யாரு… முன்னாடி ஓடுறதுக்கு பதிலா ரிவர்ஸ் ல ஓடுனேன்ல. அவனுங்க மூஞ்சய பார்க்கனுமே! சாப்பாடு தர்ரானுங்க, கடல தர்ரானுங்க முன்னாடி ஓடு நு கெஞ்சுறானுங்க! நான் மசியலையே. ரிவர்ஸ்லயே ஒடுனேன். பாதிலயே நிப்பாட்டிட்டு கடலைய கொடுத்து அனுப்பிட்டானுங்க,” டீரோ சிரித்தான்.

தன் நண்பன் உற்சாகத்தில் டெஸ்ட் ஐ ஏமாத்திவிட்டு கடலைச் சாப்பிடுவதைக் கண்ட ஜானுக்கு ஒரு மாதிரி இருந்தது. ஒரு வித பயம் அடிவயிற்றைக் கிள்ளியது. லெனினின் முகம் தோன்றியது.

“சார், இங்க பாருங்க. ஒரு குரங்கு இன்னைக்கு வித்தியாசமா நடந்துச்சு,” டாக்டர் ரமேஷ் சீசீடிவி வீடியோவை தன் மேல் அதிகாரியிடம் போட்டுக்காட்டினார்.

[இன்னொரு சிறுகதை. எல்லாருக்கும் எளிதாய் புரியக்கூடிய கதை நு நினைக்கிறேன். Do google primate neuroscience experiments, oru horror movie edukkalaam.You know the worst part, everything the animals are going thru, humans are going thru right now. Prisons, indentured labour everything.]