அத்தை மகன்

மைதிலி டியூஷன் முடிந்து தன் தோழிகளோடு பேசிக்கொண்டே டியூஷன் செண்டருக்கு வெளியில் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது எதிர்பார்க்காத வண்ணமாய் அவர்களின் டியூஷனில் படிக்கும் ஒரு பாய்ஸ் கூட்டம் இவளையும் இவளின் தோழிகளையும் அணுகியது. இவளுக்கு எதிர்பாராத விஷயம் தான் ஆனால் இவளின் தோழிகள் ஒன்னும் தெரியாதது போல் பாசாங்கு செய்வது இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதை இவளுக்குக் காட்டிக்கொடுத்துவிட்டது. 10th exam முடிந்து 11th துவங்கி இரண்டு மாதங்களாகி இருந்த தருணம். படிப்பில் இருந்த கவனம் எக்ஸாம் முடிந்ததும் வேறெங்கோ திரும்புவது இயல்பு தான்.

“உங்க க்ரூப்பும் எங்க க்ரூப்பும் சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்ட போலாமா?” கூட்டத்தில் கொஞ்சம் தைரியமானவன் முதலில் பேசினான். இவளின் தோழிகள் சரி என்று சொல்ல ஆனால் இவளோ, “இன்னைக்கு அம்மா வீட்டுக்கு சீக்கிரம் வர சொன்னாங்க. இப்டி திடுதிடுப்புன்னு வந்து சொன்னா எப்டி?” என்று சமாளித்துவிட்டு நகர்ந்தாள். அடிக்கடி தன் தோழிகளோடு செல்லும் ஐஸ் கிரீம் பாலர் தான் ஆனால் இப்போது பசங்களோடு செல்ல கொஞ்சம் தயக்கம். தோழிகள் ஏற்கனவே அவன் என்னோடா ஆள், இவன் அவளோட ஆள் என்று பங்கு பிரித்துவிட்டனர். கணேஷுக்கு மைதிளியப் பிடிக்கும் என்பதால் அநேகமாக இவளை அவனருகில் உட்கார வைத்துவிடுவர். தயக்கத்தைவிட யாராவது பார்த்துவிட்டு தன் அத்தை காதுக்குள் போட்டுவிடுவார்களோ என்ற பயம்.

மைதிலிக்கு ஒரு அத்தை மகன் இருந்தான், அப்பாவின் அக்கா மகன். சிறு வயதிலேயே இருவரின் பெற்றோரும் திருமணத்தை முடிவுசெய்துவிட்டனர். சொந்தங்களிம் திருமண வைபவங்களுக்குப் போகும்பொழுதெல்லாம் சொந்தக்காரர்கள், “பார்த்துக்கோடி, உனக்கும் நவீனுக்கும் இப்டி தாம் கல்யாநம் பண்ணி வைப்போம்,” என கிண்டலடித்தனர். மைதிலிக்கு கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன. வயசானவர்கள் கூட பரவாயில்லை இவளிம் வயதில் உள்ள இளசுகள் செய்யும் கிண்டல் இருக்கே… ஆனால் உன்னை கட்டிக்கப்போறவன் என்று இவர்கள் கேலி செய்தாலும் அவளுக்கு உள்ளூர குதூகலம் காரணம் நவீன் பார்க்க ஆறடி உயரத்தில் கம்பிரமாய் அழகாய் இருப்பான். அதுவும் அவன் காலேஜில் இரண்டாம்  ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். காலேஜ் பசங்கள் பற்றிய இனிப்பான கனவுகளும் பில்ட் அப் உம் ஸ்கூல் படிக்கும் பெண்களிடத்தில் அதிகம்.

சைக்கிளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் அம்மா மூன்று தெரு தள்ளியிருக்கும் அத்தையின் வீட்டுக்கு பலகாரங்களோடு போயிருக்கிறாள் என்று பாட்டி கூற மைதிலி புத்தகங்களை அப்படியே வாசலில் வைத்துவிட்டு சைக்கிளை அத்தை வீட்டுக்கு ஓட்டினாள். திருமணத்துக்கு முன் மாப்பிள்ளை வீட்டுக்கு செய்த பலகாரத்திலிருந்து வாங்கிய பலாப்பழம் வரை எல்லாம் அனுப்பியாக வேண்டுமே.

சைக்கிளை் அத்தையின் வாசல் சுவற்றில் சாய்த்துவிட்டு உள்ளே குதித்தோடினாள் மைதிலி. அத்தையும் அம்மாவும் கதைப் பேசுவதைக் கண்டுவிட்டு, “அத்தை ப்ரியா எங்க இருக்கா?” என வினவினாள். ப்ரியா அத்தையின் மகள், 8th standard படிக்கும் சுட்டி.

“நவீன் ரூம்ல தான் இருக்காம்மா,”

நவீன் ஹாஸ்டலிருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருக்கிறான் என்று எண்ணி பூரித்து போனாள். ப்ரியாவுடன் நவீனும் இருப்பான் என்ற கற்பனையில் பவ்யமாய் ரூமினுள் நுழைந்தவளுக்கு அங்கே  ப்ரீயா மட்டும் போனை குடைந்துக்கொண்டிருப்பது ஏமாற்றத்தைத் தந்தது. ப்ரீயா அருகில் அவளும் உட்கார்ந்தபோது ப்ரீயா நவீனின் போனில் கேம் விளையாடுவதைக் கவனித்தாள்.

“உன் அண்ணன் உனக்கு எப்டி அவனோட போனை தந்தான்?”

“அவன் தரல. நானா எடுத்துட்டேன். அவன் பாஸ்வோர்ட் கூட நானா ஒளிஞ்சு நின்னு கண்டுபிடிச்சிட்டேனே!” ப்ரியா பெருமையாய் கூறினாள்.

எப்போதும் நவீன் போனோடு தான் இருப்பான் அதுவும் யாருக்கும் அதைத் தந்ததில்லை என்பதால் மைதிலியின் ஆர்வம் அதிகரித்து.

“இங்க தா அத பார்ப்போம்,” என வலுக்கட்டாயமாக ப்ரியாவிடமிருந்து போனை பிடுங்கி சோதனைப் போட்டாள் மைதிலி. WhatsAppஇன் முதல் conversationஏ சந்தியா என்ற பெண்ணுடன் தான். சிரித்த முகமாய், மேக் அப் , free hairஉடன் சந்தியாவின் profile picture தூக்கலாய் இருந்தது. தன்னுடைய பின்னலையும் பவுடர் மட்டும் பூசியிருந்த தன் முகத்தையும் பார்த்தபோது சந்தியாவின் மேல் மைதிலிக்கு பொறாமையாக இருந்தது. நவீனின் காலேஜ் தோழியாக இருக்குமோ என யோசித்துக்கொண்டே தொடர்ந்து சோதனைப் போட்டாள். சந்தியாவை நவீன் காதலிக்கிறானா இல்லை இருவரும் பொழுதுபோக்குக் கடலைப் போடுகிறார்களா என்று மைதிலிக்கு தெரியவில்லை. ஆனால்  இருவரும் கொஞ்சி பேசுவது மட்டும் புரிந்தது. மாலையில் வாடும் பூ போல மைதிலியின் பிஞ்சு மனமும் வாடியது.

இதை அத்தையிடம் காட்டினாள் என்ன என்று எண்ணுகையில் அவளுக்கே புலப்பட்டது.
“எம் மகன் பார்க்க ஹீரோ மாதிரி இருக்கான். கூட படிக்கிற பொண்ணுங்க இவன காதலிக்க தான் செய்வாங்க,” என பெருமிதமாய் கூறுவாள்.

அம்மாவிடம் சொன்னாள், “கல்யாணத்துக்கு முன்னாடி எல்லா பசங்களும் இப்டி தான். நீ தான் எல்லாம் கண்டும் காணாததும் மாதிரி நடந்துக்கனும்,” என சமாளிப்பாள்.

மைதிலி பார்த்தது போதும், இதற்கு மேல் பார்த்தும் ஒன்னும் ஆகிவிடாது என போனை பிரியாவிடம் திருப்பிக் கொடுத்தாள். மாடியிலிருந்து இறங்கி வந்தபோது அம்மாவும் அத்தையும் இன்னும் பேசிக்கொண்டு தான் இருந்தனர். homework இருக்கு என சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினாள் மைதிலி. சைக்கிளை ஓட்டக் கூட தோணவில்லை, தள்ளிக்கொண்டே மூன்று தெருவைத் தாண்டினாள். பாட்டி வீட்டு நிலைப்படியில் அமர்ந்திருந்தாள், “என்னடி, கட்டிக்க போறவனை பார்த்துட்டு வரியா?” என நக்கலாய் கேட்க மைதிலி முறைத்துவிட்டு உள்ளே போனாள்.

அடுத்த நாள் டியூஷனுக்கு சைக்கிளை ஒட்டிக்கொண்டு வந்தவளுக்கு ஓர் அதிர்ச்சி. டியூஷன் centerகு இரண்டு அடி முன்னாள் கணேஷ் நின்றுக்கொண்டிருந்தான். இவளைக் கண்டதும் சைக்கிள் மேல் சாய்ந்திருந்தவன் attention என நின்றான். அவன் கைகளைப் பிசைந்துக்கொண்டும் நின்ற இடத்தில் நடனம் ஆடுவதைக் கண்டும் மைதிலிக்கு அவளோட பேச தான் காத்திருக்கிறான் என புலப்பட்டது. எப்போதும் போல் பார்க்காதது போல் கடந்துவிடலாமா இல்லை பேசலாமா? சந்தியாவின் முகம் பட்டென தோன்றி மைதிலியின் மனத்தைக் குறுகுறுக்க வைத்தது. பேசாலாமா?